தக்கலை, ஆக. 7 –
தக்கலை அருகே உள்ள மணலி என்ற பகுதியில் கடந்த 22-7-2003 அன்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாலை ஓரத்தில் சந்தேகத்துக்கிடமாக பிளாஸ்டிக் பையுடன் நடந்து சென்ற 4 பேரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது ரூ. 3 லட்சத்து 45 ஆயிரம் கள்ள நோட்டுகள் இருப்பதை கண்டுபிடித்தனர். பிடிபட்டவர்கள் பத்மநாபபுரம் பகுதியை சேர்ந்த வெனான்சியஸ் (60), கேரளா மாநிலம் சசி (54), கிளைமன்ட் (54), விருதுநகர் அமல்ராஜ் (54) என்பது தெரிய வந்தது.
இதை தொடர்ந்து 4 பேரும் கைது செய்யப்பட்டனர். இது தொடர்பான வழக்கு பத்மநாபபுரம் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கில் நீதிபதி மாரியப்பன் இன்று தீர்ப்பளித்தார். அதில் கிளைமன்ட், அமல்ராஜ் ஆகியோருக்கு ஏழு ஆண்டு கடுங்காவல் தண்டனையும், ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். அதே நேரம் வழக்கு நடந்த போது இடையில் சசி தலைமறை ஆகிவிட்டதால் அவருடைய வழக்கு தனியாக நடக்கிறது. மேலும் வெனான்சியஸ் இறந்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.