சோழவந்தான், ஆகஸ்ட் 9 –
மதுரை மாவட்டம் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சோழவந்தான் வடகரை கண்மாய், தென்கரை கண்மாய், முல்லைப் பெரியாறு பாசன கால்வாய் மூலம் அறுவடை செய்த நெல்களை கொள்முதல் செய்ய சோழவந்தான் ஊத்துக்குளி, முள்ளி பள்ளம், மன்னாடிமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்து வந்தது.
இந்த நிலையில் குறிப்பிட்ட காலம் முடிந்தவுடன் நெல்லை கொள்முதல் செய்வதை நிறுத்திவிட்டது. ஆனால் விவசாயிகள் கிணற்று பாசனம் மூலமும் தாமதமாக நடவு செய்த விவசாயிகளும் சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கரில் சோழவந்தான் பகுதிகளில் நெல் அறுவடை செய்து வருகின்றனர். நெல் கொள்முதல் நிலையத்தை அரசு மூடி விட்டதால் தற்போது அறுவடை செய்யும் நெல் மூட்டைகளை அலங்காநல்லூர் அருகே உள்ள வைரவநத்தம் கிராமத்தில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு விவசாயிகள் கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே சோழவந்தான் பகுதிகளில் உள்ள கொள்முதல் நிலையங்களுக்கு நெல்லை கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்களும் கூடுதல் செலவுகளும் ஏற்படுவதாக விவசாயிகள் குற்றம் சாட்டி வந்த நிலையில் தற்போது சோழவந்தானிலிருந்து சுமார் 15 கிலோமீட்டர் தூரம் உள்ள அலங்காநல்லூர் பகுதிக்கு நெல் மூட்டைகளை கொண்டு செல்வதால் மேலும் கூடுதல் செலவாகும் மற்றும் குறிப்பிட்ட அளவு நெல் வீணாகும் நிலையும் ஏற்படும் என விவசாயிகள் புகார் தெரிவிக்கின்றனர்.
வாகன வசதி இல்லாத நிலையில் தற்போது மூடைக்கு 100 ரூபாய் முதல் 150 வரை வசூல் செய்வதாகவும் ஆகையால் விவசாயிகளுக்கு பெருத்த நஷ்டம் ஏற்படுவதாகும் புகார் தெரிவிக்கின்றனர். விவசாயிகளின் நலன் கருதி நெல் கொள்முதல் நிலையங்களை இன்னும் சில நாட்கள் நீட்டித்து அனுமதி வழங்க வேண்டும் என அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.