தென்காசி, ஆகஸ்ட் 5 –
தென்காசி வடக்கு திமுக மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ விடுத்துள்ள அறிக்கையில், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி திருக்கோயில் உலக பிரசித்தி பெற்றதாகும். உலகில் உள்ள அனைவருக்கும் சைவமும், வைணவமும் ஒன்று என்பதை உணர்த்தும் வகையில் தவம் இருக்கும் கோமதி அம்மனுக்கு ஆடி மாதம் உத்திராடம் நட்சத்திரத்தில் சிவபெருமான் கோமதி அம்மனுக்கு சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவம் மிக முக்கியத்துவம் பெற்றதாகும். இந்த காட்சியை காண தமிழ்நாடு மட்டுமல்ல, வெளி மாநிலங்களில் இருந்தும் பல லட்சக்கணக்கான பக்தர்கள் சங்கரன்கோவிலுக்கு வந்து தரிசனம் செய்வது வழக்கம்.
இந்த ஆண்டிற்கான ஆடித்தபசு திருவிழா நாளை ஆகஸ்ட் 7 ம் தேதி வியாழக்கிழமை நடைபெறுகிறது. நாளை மாலை 6.00 மணிக்கு மேல் தவம் இருக்கும் கோமதி அம்மனுக்கு சிவபெருமான் சங்கரநாராயணராக காட்சி கொடுக்கும் வைபவமும் அதனைத் தொடர்ந்து இரவு 11.30 மணிக்கு மேல் சிவபெருமான் சங்கரலிங்கமாக காட்சி கொடுக்கும் வைபவமும் நடைபெறுகிறது.
ஆடித்தபசு திருநாளில் கலந்து கொள்ளும் பக்தர்கள் எந்தவித சிரமமும் இன்றி தரிசனம் செய்வதற்கு காவல்துறை, நகராட்சி நிர்வாகம், கோயில் நிர்வாகம், போக்குவரத்து துறை, சுகாதாரத்துறை, மின்வாரியம், தீயணைப்புத் துறையினர், நெடுஞ்சாலை துறையினர் உள்ளிட்ட அனைத்து துறையினரும் பக்தர்கள் சிறப்பாக தரிசனம் செய்யும் வகையில் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்ய வேண்டும் எனவும் அனைத்து அரசு துறையினரும் ஆடித்தபசு திருவிழாவை சிறப்பாக நடத்த பணி செய்து வரும் நிலையில் பொதுமக்களும் அவர்களுக்கு ஒத்துழைப்பு அளித்து ஆடித்தபசு திருநாள் சிறப்பாக நடக்க வழிவகை செய்ய வேண்டும் எனவும் அனைவரும் அன்னை கோமதியின் தபசுகாட்சியை நல்ல முறையில் கண்டு கடவுளின் அருள் பெற வேண்டும் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.