வேலூர், ஜூலை 23 –
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு ஆட்சியர் சுப்புலெட்சுமி தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றார். அப்போது வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த நர்கீஸ் என்பவர் ஆம்புலன்ஸில் ஆட்சியர் அலுவலகம் வந்தார். இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஆர்டிஓ செந்தில்குமார் உடனடியாக ஆம்புலன்ஸில் இருந்த நர்கீஸ் இடம் விசாரணை மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் தாலுகா பிரம்மபுரம் போலீஸ் நிலையத்தில் உதவி காவல் ஆய்வாளராக பணிபுரியும் பாபா என்பவரது மகன் காஜா ரபிக்கை கடந்த 2023-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டேன். திருமணத்தின் போது எனது பெற்றோர் 30 பவுன் நகை பைக் வாங்க என் கணவருக்கு ரூபாய் ஒரு லட்சத்து 50 ஆயிரம் மற்றும் 500 கிராம் வெள்ளிப் பொருட்கள், 3 லட்சம் மதிப்பில் சீர்வரிசை பொருட்கள் மற்றும் திருமண செலவு 6 லட்சம் என விமர்சையாக திருமணம் செய்து வைத்தனர்.
இந்த நிலையில் எனது கணவர் குடும்பத்தினர் எனது ஏழ்மையை கேலி கிண்டல் செய்தனர். மேலும் நான் குறைவான நகை போட்டு வந்ததாக கூறி துன்புறுத்துகின்றனர். கடந்த மாதம் எனது கணவர் என்னிடம் தகராறில் ஈடுபட்டு தொடர்ந்து என்னை சரமாரியாக தாக்கினார். தொடர்ந்து மொட்டை மாடியில் இருந்து என்னை கீழே தள்ளிவிட்டார். எனக்கு இதில் இடுப்பு இரண்டு கால்கள் எலும்பு முறிவு ஏற்பட்டு நகர முடியாமல் இருந்தேன்.
அக்கம் பக்கத்தினர் எனது அழுகை சத்தத்தை பார்த்து என்னை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக அரியூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். அவர்கள் எந்த ஒரு நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. இதுவரை தனியார் மருத்துவமனையில் ரூபாய் 6 லட்சம் வரை செலவு செய்துள்ளேன். எனது உறவினர்களிடம் கடன் வாங்கி சிகிச்சை பெற்று வருகிறேன். என் கணவர் உட்பட அவரது குடும்பத்தினர் யாரும் இதுவரை என்னை வந்து பார்க்கவில்லை.
எனவே என்னிடம் கூடுதல் வரதட்சணை கேட்டு என்னை சித்திரவதை செய்யும் துன்புறுத்தி கொலை செய்ய முயற்சி செய்த மாமனார், மாமியார் மற்றும் கணவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் கூறினார். உடனடியாக இதுகுறித்து விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என ஆர்டிஓ செந்தில்குமார் தெரிவித்தார்.
அதன் பின்பு ஆம்புலன்ஸ் அருகே வந்த மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி அவர்கள் நர்கீஸ் அவர்களிடம் நடந்த விவரங்களை கேட்டு அறிந்து உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.