கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், சமூக பாதுகாப்புத்துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சார்பாக, குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .கே.எம்.சரயு ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் .தங்கதுரை அவர்கள் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் பேசிய மாவட்ட ஆட்சியர் அவர்கள் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தில் ஈடுபடும் நபர்கள் மீது உடனடியாக POCSO வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறையினருக்கு அறிவுறுத்தினார். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உரிய நிவாரணம் அரசிடமிருந்து பெற்றுத் தரவும், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரை அறிவுறுத்தினார். குழந்தை திருமணங்கள் குறித்த புகார் வரப்பெற்றவுடன் கால தாமதமின்றி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளவும் அக்குழந்தைகள் தொடர்ந்து கல்வி பயிலவதை உறுதி செய்யவும் மற்றும் தொடர்ந்து கண்காணிக்கவும், மாவட்ட சமூக நல அலுவலருக்கு கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது. குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்வதை உறுதி செய்யவும், கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர், காவல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், குழந்தைகள் நலக் குழுமம், மாவட்ட சமூக நல அலுவலர், காவல் ஆய்வாளர்கள், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த அனைத்து மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள், அடங்கிய வாட்ஸ் ஆப் குழு ஏற்படுத்தவும் உத்திரவிட்டார். இதைத் தொடர்ந்து பேசிய காவல் கண்காணிப்பாளர் அவர்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோர் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்வது காவல் அலுவலர்களால் உறுதி செய்யப்படும் என்று தெரிவித்தார். POCSO மற்றும் குழந்தை திருமணங்களில் காவல் அலுவலர்கள் பின்பற்ற வேண்டிய பல்வேறு நடைமுறைகள் குறித்து இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் த.த.சரவணன், மாவட்ட சமூக நல அலுவலர், குழந்தைகள் நலக் குழும உறுப்பினர்கள், துணை காவல் கண்காணிப்பாளர்கள், மகளிர் நிலைய காவல் ஆய்வாளர்கள் ஆகியோர் பங்கேற்றனர்.
குழந்தை திருமணங்களை தடுத்தல் மற்றும் குழந்தைகள் மீதான பாலியல் துன்புறுத்தல் தடுத்தல் குறித்த ஆய்வுக் கூட்டம்

Leave a comment