நாகர்கோவில், அக்டோபர் 11 –
குமரி மாவட்டத்தில் இந்த ஆண்டு இதுவரை 33 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மேலும் பலரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குமரி மாவட்டம் காஞ்சிரங்கோடு குழிச்சவிளை பகுதியை சேர்ந்தவர் ஜஸ்டின் குமார் (56). கொத்தனார். இவரது மனைவி கஸ்தூரி (50). இவர்களுக்கு இரண்டு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். கடந்த செப்டம்பர் 14ம் தேதி கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனைவியை கத்தியால் குத்தி கழுத்தை அறுத்துவிட்டு ஜஸ்டின் குமார் தப்பினார். சிறிது நேரத்தில் கஸ்தூரி இறந்தார். அவரது மகள் வந்து பார்த்தபோது தான் கொலை நடந்தது தெரியவந்தது. இது தொடர்பாக மார்த்தாண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜஸ்டின் குமாரை கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இவரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிடுமாறு கலெக்டர் அழகு மீனாவுக்கு எஸ்.பி. ஸ்டாலின் பரிந்துரை செய்தார். இதை ஏற்று ஜஸ்டின் குமாரை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க கலெக்டர் உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து மார்த்தாண்டம் இன்ஸ்பெக்டர் வேளாங்கண்ணி உதய ரேகா ஜஸ்டின் குமாரை குண்டர் சட்டத்தில் கைது செய்து பாளை சிறையில் அடைத்தனர்.
இந்த வருடத்தில் இதுவரை 33 பேர் கொண்ட சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அதேபோல் மேலும் பலரை குண்டர் சட்டத்தில் கைது செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்கள் மீண்டும் குற்ற சம்பவங்களில் சிக்கி வழக்கு பதிவு செய்யப்படுகிறது. இதுபோன்ற நபர்களை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பி. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். எனவே சரித்திர பதிவேடு பட்டியலில் உள்ளவர்களை கண்காணித்து காவல்துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


