நாகர்கோவில் மே 1
தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் என ஏற்கனவே வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை கொடுத்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தவரைக்கும் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் அதாவது பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக கோடை மழை பெய்து வருகிறது. இதனால் முக்கிய அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஆனால் மாவட்டத்திற்குள் நகரப் பகுதிகளில் மழை இல்லாமல் வெயிலின் தாக்கம் அதிகமாகவே இருந்து வந்தது. இதனால் மக்கள் மிகப்பெரிய சிரமத்துக்கு ஆளானார்கள். இந்த நிலையில் நேற்று திடீரென நாகர்கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் திடீரென மழை பெய்ததால் கடும் வெப்பத்திலிருந்து விடுபட்டு மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இந்த மழை தொடரும் என பொதுமக்கள் தரப்பில் எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மாவட்டத்தில் அதிகபட்சமாக தக்கலையில் 45 மில்லிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. இதேபோன்று கோழிப்போர்விளையில் 32.05 மில்லிமீட்டர் மழையும் சுருளகோடு 28.04 மில்லிமீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. இதேபோன்று 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 43.60 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 372 கனஅடி தண்ணீரும், 77 அடி கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 47.45 அடியாக உயர்ந்துள்ளது.