கன்னியாகுமரி, நவ. 3 –
கன்னியாகுமரியில் அமைந்துள்ள தூய அலங்கார உபகார மாதா திருத்தலம் குமரி மாவட்டத்தில் உள்ள கத்தோலிக்க கிறிஸ்தவ திருத்தலங்களில் மிகவும் புகழ்பெற்றது ஆகும். இந்த திருத்தலத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் 10 நாட்கள் திருவிழா நடைபெறுவது வழக்கம்.
அதேபோல இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (டிசம்பர்) 5-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 14-ந் தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. இந்த திருவிழாவையொட்டி தேர் அலங்காரம், நாதஸ்வரம், பேண்ட் வாத்திய இசை, ஒலி-ஒளி அமைப்பு, கோவில் மின்விளக்கு அலங்காரம், வானவேடிக்கை, மெல்லிசைக் கச்சேரி மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் உள்பட அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் பங்கு மக்கள் முன்னிலையில் வெற்றிலை பாக்குடன் முன் பணம் கொடுக்கும் “பாக்கும் படியும்” நிகழ்ச்சி நடைபெற்றது.
கன்னியாகுமரி தூய அலங்கார உபகார மாதா திருத்தல அதிபர் உபால்டு மரியதாசன் தலைமை தாங்கினார். பங்குப்பேரவை துணைத்தலைவர் டாலன் டிவோட்டா, செயலாளர் ஸ்டார்வின், பொருளாளர் ரூபன், துணை செயலாளர் டெமி, இணை பங்கு தந்தையர்கள் ஆகியோர் முன்னிலையில் பாக்கும் படி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பங்கு மக்கள் கலந்து கொண்டனர்.



