கன்னியாகுமரி, ஜூலை 23 –
கன்னியாகுமரி அருகே தாமரைக்குளம் ரயில்வே தண்டவாளத்தில் இன்று காலை சுமார் 7.30 மணி அளவில், அடையாளம் தெரியாத வாலிபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். சம்பவம் தொடர்பாக ரயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.
உயிரிழந்தவர் சுமார் 30 முதல் 35 வயதுடையவராக இருக்கலாம் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அவர் கருப்பு நிற டி-ஷர்ட் அணிந்திருந்ததாகவும், முகம் மற்றும் உடல் முழுவதும் கடுமையாக சிதைந்த நிலையில் இருந்ததாகவும் முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, நாகர்கோயில் ரயில்வே காவல் நிலைய காவல் ஆய்வாளர் விஜயகுமார் தலைமையிலான போலீஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை மீட்டனர். பின்னர், உடல் பிரேதப் பரிசோதனைக்காக ஆம்புலன்ஸ் மூலம் குமரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்தவர் யார்? என்பது இதுவரை உறுதி செய்யப்படவில்லை. அவரது அடையாளத்தை கண்டறியும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். மேலும், உயிரிழந்தவர் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையிலும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சம்பவம் தொடர்பான அனைத்து கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருவதாக ரயில்வே காவல்துறை தெரிவித்துள்ளது. பிரேதப் பரிசோதனை அறிக்கையும், விசாரணையில் கிடைக்கும் தகவல்களும் உயிரிழப்புக்கான சூழ்நிலைகளைத் தெளிவுபடுத்தும் என அதிகாரிகள் கூறினர்.


