தஞ்சாவூர், ஜூலை 12 –
தஞ்சாவூர் மாவட்டத்தில் உணவு வணிகர்களுக்கான உரிமம் இல்லாவிட்டால் வழக்கு பதிவு செய்யப்படும் என மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:
உணவு பாதுகாப்புச் சட்டம் இந்தியா முழுவதும் கடந்த 2011-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டது. அதன்படி உணவு பொருள் தயாரிப்பாளர்கள், மொத்த வியாபாரிகள், விநியோகஸ்தர்கள், இருப்பு கிடங்குகள், ஹோட்டல் மற்றும் மளிகை கடைகள், வாகனங்களில் உணவு வணிகம் செய்வோர், உணவு பொருள்களை விற்பனை செய்யும் இதர வியாபாரிகள் உள்ளிட்டடோருக்கு உணவு பாதுகாப்பு துறையின் உரிமம் பதிவு சான்று கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவு சான்றிதழ் இல்லாமலோ அல்லது காலாவதி உரிமத்துடனோ உணவு வணிகம் செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும். எனவே உணவு வணிகர்கள் தங்களுடைய உரிமம், பதிவு சான்றிதழை (fosco.gov.in. இ -சேவை மையம் அல்லது food safety Mithra) மூலம் விண்ணப்பிக்கலாம் என அறிவுறுத்தப்படுகிறது. உணவு வணிகம் செய்பவர்கள் உரிமம், பதிவு சான்றிதழ் பெறாமல் உணவு வணிகம் செய்வது சட்டப்படி குற்றமாகும். உணவு பாதுகாப்பு பதிவு சான்றிதழ் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் ரூபாய் 5 ஆயிரம் அபராதமும், உரிமம் இல்லாமல் உணவு வணிகம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படும்.
உணவு வணிகம் செய்து கொள்முதல் ரூபாய் 12 லட்சம் வரை இருந்தால் பதிவு சான்றிதழ் ரூபாய் 100கட்டணம் செலுத்த வேண்டும். ரூபாய் 12 லட்சத்துக்கு மேல் உணவு வணிகம் கொள்முதல் செய்பவர்கள் ரூபாய் 2 ஆயிரம் மற்றும் தயாரிப்பாளர்கள், மறு பொட்டலமிடுவோர் ரூபாய் 3 ஆயிரம், ரூபாய் 5 ஆயிரம், ஏற்றுமதியாளர்கள் மற்றும் இறக்குமதியாளர்கள் ரூபாய் 7,500 கட்டணம் செலுத்தி உரிமம் பெற வேண்டும். எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு துறையின் உரிமம், பதிவு சான்றிதழ் பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.