போகலூர், ஜுலை 14 –
ராமநாதபுரம் மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: ராமநாதபுரம் மாவட்டத்தில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் முகாம்கள் ஜூலை 15 முதல் செப்டம்பர் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது. நகர்ப்புறம் ஊராட்சி மற்றும் பேரூராட்சிகளில் முகாம்கள் நடைபெற உள்ளது. நகர்புறங்களில் 13 அரசு துறைகளில் 43 சேவைகளும் ஊரகப் பகுதிகளில் 15 அரசு துறைகளில் 46 அரசு சேவைகளும் வழங்குவதற்கு ஏதுவாக முகாம்கள் நடைபெற உள்ளது.
மேலும் இந்த முகாம்களில் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை பெற தகுதியுள்ள விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின் முகாம் நடைபெறும் நாள் அன்று தங்கள் விண்ணப்பத்தை அளிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் உங்களுடன் ஸ்டாலின் திட்டம் முகாம்களில் மட்டுமே வழங்கப்படும். இம்முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இத்திட்டம் குறித்த விபரங்களை பொதுமக்களுக்கு முறையாக தெரிவிப்பதற்காக உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தன்னார்வலர்கள் மூலம் வீடு வீடாக சென்று விண்ணப்பம் மற்றும் தகவல் கையேடு வழங்கும் பணி கடந்த ஜூலை 8 ம் தேதி முதல் நடைபெற்று வருகிறது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் ஜூலை 15-ம் தேதி அன்று உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் ராமநாதபுரம் நகராட்சியில் வார்டு எண் 28,29,30 வசிக்கும் மக்களுக்கு கீரைக்கார தெருவில் உள்ள காதர் டீலக்ஸ் மகாலிலும் அபிராமம் பேரூராட்சியில் அகத்தாரிருப்பு சமுதாய கூடத்திலும், பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்தில் பாம்பூர், கலையூர் மற்றும் வெங்கிட்டான்குறிச்சி பாம்பூர் சமுதாய கூடத்திலும் திருவாடானை ஊராட்சி ஒன்றியத்தில் அஞ்சு கோட்டை, குஞ்சம் குளம், திருவாடானை ஆகிய கிராமங்களுக்கு திருவாடானை இரட்டை அரு பங்களாவிலும் கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் வாலிநோக்கம், மாரியூர் கிராமங்களுக்கு மாரியூர் ஊராட்சி செயலக கட்டடத்திலும் மற்றும் முதுகுளத்தூர் ஊராட்சி ஒன்றியத்தில் மேல கொடுமலூர், கீழக்கொடுமலூர் மற்றும் விக்கிரபாண்டிபுரம் கிராமங்களுக்கு மேலகொடுமலூர் சமுதாயக்கூடத்திலும் முகாம்கள் நடைபெற உள்ளது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்கள் நடைபெறும் இடங்களின் விவரங்கள் பொதுமக்கள் இணையதளத்தில் பார்வையிட்டு தெரிந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.