குளச்சல், ஜூலை 14 –
குளச்சல் கால்பந்து கழகம் சார்பில் நடைபெற்ற கால்பந்து போட்டிகளை நாம் தமிழர் கட்சி சார்பில் மாநில மகளிர் பாசறை செயலாளர் ஆன்சி மற்றும் மாநில இளைஞர் பாசறை செயலாளர் ஹிம்லர் ஆகியோருடன் இணைந்து நாம் தமிழர் கட்சி மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளர் மரிய ஜெனிபர் தொடங்கி வைத்தார். தொடர்ந்து அவர் போட்டியாளர்களை ஊக்கப்படுத்தி வெற்றி பெற்றவர்களுக்கு பரிசையும் வழங்கினார். பரிசுத்தொகையானது குளச்சல் தொகுதி நாம் தமிழர் நிர்வாகிகளால் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மரிய ஜெனிபர் பேசியதாவது: இந்த கால்பந்து போட்டிகளில் நாம் தமிழர் கட்சியின் பங்களிப்பு மிகவும் பாராட்டுக்குரியது. கடந்த வருடத்திலிருந்து எனக்கும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தவும், பாராட்டி வாழ்த்தவும் வாய்ப்பு கிடைத்ததற்கு பெரிதும் மகிழ்கிறேன். இளைஞர்களை வழிதவறச்செய்யும் பல வாய்ப்புகள் உருவாவதற்கு ஆளும் அரசே காரணமாகி வரும் இக்காலகட்டத்தில் இளைஞர்களை உடல் ரீதியாகவும் மனநல ரீதியாகவும் பலப்படுத்தி ஒழுக்கத்துடன் பண்படுத்தும் இது போன்ற விளையாட்டுகளையும் விளையாட்டுப் போட்டிகளையும் தொடர்ந்து ஊக்கப்படுத்துவது நமது கடமையாக உணர்கிறேன்.
போட்டியை ஒருங்கிணைத்த குளச்சல் கால்பந்து கழகத்தினர், குளச்சல் பகுதி மக்கள் அனைவருக்கும் பாராட்டுகள். நிகழ்வில் கலந்து கொண்டு வீரர்களை ஊக்கப்படுத்திய நாம் தமிழர் நிர்வாகிகள் மற்றும் உறவுகள் அனைவருக்கும் நன்றிகள். போட்டியில் கலந்து கொண்ட மற்றும் வெற்றி பெற்ற அனைத்து அணிகளுக்கும் வீரர்களுக்கும் வாழ்த்துகள் என அவர் பேசினார்.