ராஜாக்கமங்கலம், ஜூலை 24 –
மண்டைக்காடு அருகே லட்சுமி புரத்தை சேர்ந்தவர் சுவாமிதாஸ் (63). வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவரது மனைவி கவிதா. இந்த தம்பதிக்கு 25, 22 வயதுகளில் 2 பிள்ளைகள் உள்ளனர். இவர்களுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது தாயாருடன் வசித்து வருகின்றனர். சில வருடங்களுக்கு முன்பு சுவாமிதாஸ் கவிதா தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் அவர்கள் தற்போது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். கடந்த 2020-ம் ஆண்டு முதல் ராஜாக்கமங்கலம் அருகே உள்ள சகோதரி கிருஷ்ணபாய் வீட்டில் சுவாமிதாஸ் தங்கி இருந்து சகோதரியின் கணவர் வைத்துள்ள மளிகை கடையில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இதற்கு இடையே நேற்று முன்தினம் இரவு கடையில் சுவாமிதாஸ் மட்டும் இருந்துள்ளார். அந்த பகுதியில் வேறு ஆள் நடமாட்டம் எதுவும் இல்லை. இரவு சுமார் 10 மணி அளவில் ஒரு பைக்கில் இரண்டு பேர் வந்துள்ளனர். கடையில் இருந்த சுவாமிதாசை அறிவாளால் சரமாரியாக வெட்டி சாய்த்து உள்ளனர். இதில் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்துள்ளனர். அப்போது வெட்டிய இரண்டு பேரும் பைக்கில் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர். இந்த தகவல் அறிந்ததும் அவரது சகோதரி விரைந்து வந்து ராஜாக்கமங்கலம் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். மேலும் கன்னியாகுமரி, குளச்சல் டிஎஸ்பிக்கள் விரைந்து சென்று போலீஸ் மோப்ப நாய் சகிதம் சம்பவ இடத்தில் விசாரித்தனர்.
இதை தொடர்ந்து போலீசார் சுவாமிதாஸ் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து ராஜக்கமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இது சம்மந்தமாக சுவாமி தாஸ் சகோதரி அளித்த புகாரில், கடந்த 10 வருடங்களாக குடும்பத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு சகோதரர் சுவாமி தாஸ் மனைவியைப் பிரிந்து வாழ்கிறார். கடந்த 2020 முதல் தனது வீட்டில் தங்கி இருந்து வருவதாகவும், சுவாமிதாஸுக்கு லட்சுமிபுரத்தில் வீட்டு மனையுடன் கூடிய 45 சென்ட் இருந்து வருவதாகவும் உள்ளது. அந்த நிலத்தை தனது மனைவி பெயருக்கு மாற்றி தருமாறு மனைவி கேட்டுள்ளார். ஆனால் சுவாமிதாஸ் கொடுக்க மறுத்துள்ளதால் தான் சகோதரனை கொலை செய்ய இந்த கொலை நடந்துள்ளதாக அவர் புகாரில் கூறியுள்ளார். இது ராஜக்கமங்கலம் போலீசார் மேலும் வழக்கு பதிவு செய்து சுவாமி தாஸ் மனைவியிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.