வேலூர், ஆகஸ்ட் 06 –
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலத்திற்கு உட்பட 6,7-வது வார்டுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் காட்பாடியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில் நீர்வளத்துறை அமைச்சரும் காட்பாடி சட்டமன்ற உறுப்பினருமான துரைமுருகன் கலந்துகொண்டு பார்வையிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் துரைமுருகன் கலைஞர் பல்கலைக்கழகம் துவங்குவதற்கு அனுமதி தர ஆளுநர் குடியரசு தலைவருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறதே செய்தியாளர்கள் கேட்டதற்கு “வழக்கத்திற்கு மாறாக ஆளுநர் தொடர்ந்து அனுப்பி கொண்டு தான் இருப்பார். ஆளுநருக்கு இது புதிதல்ல”
பாலாற்றில் ஒரு அணையைக் கூட கட்டவில்லை என அன்புமணி கூறியுள்ளார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு “பாமக தலைவர் அன்புமணி தடுப்பணை குறித்து நான் வெளியிட்ட அறிக்கையை அவர் சரியாக படிக்காமல் பேசுகிறார். அவர் படிக்கவில்லை என்று விட்டுவிட்டேன்”
வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் என்பாதால் தான் அமைச்சர் துரைமுருகனை திமுக ஒதுக்குகிறார்களே என அன்புமணி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “ஒதுக்கப்படுகின்றேனா இல்லையா என்பது சொல்ல வேண்டியது நான்; அன்புமணி அல்ல. அவர் அவருடைய அப்பா சொல்வதைக் கேட்டால் போதும்”
பாஜக கூட்டணி வேறு அதிமுக கொள்கை வேறு என எடப்பாடி பழனிச்சாமி கூறியுள்ளாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அவர் சொன்னால் அவரைத்தான் கேட்க வேண்டும். என்னை ஏன் கேட்கிறீர்கள்”
ஜீரோ மாடல் ஆட்சி திமுக என எடப்பாடி பழனிசாமி கூறி வருகிறார் என செய்தியாளர்கள் கேட்டதற்கு “இந்தக் கூட்டத்தை பார்த்தால் தெரியாதா? எப்படிப்பட்ட ஆட்சி என்று” பதில் அளித்தார்.
அதிமுக கொண்டு வந்த திட்டங்களுக்கு திமுக ஸ்டிக்கர் ஒட்டி கொள்கிறது என எடப்பாடி பழனிசாமி பிரச்சாரங்களில் கூறி வருகிறாரே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “எந்த ஒரு திட்டத்தையும் நாங்கள் அப்படி செய்யவில்லை. அந்த ஆட்சியில் பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களா? கல்லூரி படிக்கும் மாணவர்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தார்களா? எனவே எந்த ஒரு திட்டமும் நாங்கள் அவர்களை பின்பற்றவில்லை. திமுக பல புதிய திட்டங்களை கொண்டு வந்துள்ளது.”
திமுக கூட்டணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆணவ படுகொலைகளை தடுக்க கடுமையான சட்டம் கொண்டு வர வேண்டும் என கூறியுள்ளார்களே என செய்தியாளர்கள் கேட்டதற்கு “ஆணவ படுகொலை தடுப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்று முதலமைச்சரிடம் பேசுவேன். அது எல்லாம் உங்களிடம் சொல்ல வேண்டியதில்லை. சில விஷயங்கள் சட்டசபையில் பேச வேண்டியுள்ளது.” இது குறித்து வருகின்ற அமைச்சரவை கூட்டத்தில் பேச வாய்ப்புள்ளதா என செய்தியாளர்கள் கேட்டதற்கு “அதற்கான வாய்ப்பு இருக்கலாம்; இருக்கலாம்” என்று அழுத்தமாக கூறினார்.