மார்த்தாண்டம், ஜூன் 2 –
அருமனை அருகே கடையாலுமூடு பேரூராட்சிக்குட்பட்ட மருதம்பாறை பகுதியில் ரப்பர் தோட்டங்கள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் 200க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இதற்கிடையே இன்று காலை சுமார் 6:30 மணிக்கு 3 யானைகள் கூட்டமாக ரப்பர் தோட்டத்தில் உலாவி கொண்டிருந்தன. இதை அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மாணவர் ஒருவர் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். தொடர்ந்து கிராம மக்களுக்கு யானைகள் கூட்டம் குறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது.
உடனே உஷாரான கிராம மக்கள் அதிக சத்தம் எழுப்பியவாறு யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்ட முயன்றனர். ஆனால் யானை கூட்டம் கருமலை அடித்தோட்டம் வழியாக குடியிருப்பு பகுதியை சுற்றி வர தொடங்கின. இதனால் பயந்து போன மக்கள் கூட்டத்தில் ஒரு பகுதியினர் பின் வாங்கினர்.
பின்னர் வனத்துறையினருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவித்தனர். இதை அடுத்து வனச்சரகர் முகைதீன் தலைமையில் குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் பட்டாசுகள் வெடித்து யானை கூட்டத்தை காட்டுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் மூன்று யானைகளும் மூன்று திசைகளுக்கு பிரிந்து சென்றுவிட்டன. இதனால் யானைகள் எந்த எல்லையில் நிற்கிறது என்பது தெரியாமல் வனத்துறையினர் திணறினர். மலைப்பகுதிகளில் உள்ள வழிகளில் மேடும் பள்ளமுமாக காணப்படுவதால் யானைகள் நடமாட்டத்தை வனத்துறையினரால் சரியாக கணிக்க முடியவில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் குழப்பம் அடைந்துள்ளனர்.
பொதுமக்களுக்கு ஆபத்து ஏதும் நேர்ந்து விடக்கூடாது என்பதற்காக அவர்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வனத்துறையினர் அறிவுறுதியுள்ளனர். யானை கூட்டம் இன்று காலை எப்படி மருதம் பாறை பகுதிக்கு ஊடுருவியது என்பது குறித்து வனத்துறையினர் விசாரித்தனர். விசாரணையில் காந்திமதி தோட்டத்தின் உள்பகுதிக்கு வந்த யானை கூட்டங்கள், கேட்டை உடைத்து கணபதிகல், மருதம் பாறை வழியாக பேணு பகுதி வழியாக கருஞ்சிறை பகுதியில் உலாவியது தெரிய வந்தது.



