மார்த்தாண்டம், ஆக. 7 –
அருமனை அருகே செறுவல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஷாஜி மனைவி அசுவதி (34). இந்த தம்பதிக்கு ஆனந்த் (15) என்ற மகன் உள்ளார். மேல்பாலையில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். சம்பவத்தன்று இரவு ஆனந்த் டியூஷன் முடித்து குறேகோடு என்ற பகுதியில் ரப்பர் தோட்டம் வழியாக நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த 22 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் திடீர் என மாணவனை மறித்து தகராறு செய்து பின்னர் மாணவர் ஆனந்தை தகாத வார்த்தைகளை பேசி திட்டியதுடன் கீழே தள்ளி தாக்கியுள்ளார். இதில் மாணவனுக்கு உடலில் பல இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. தாக்கிய வாலிபர் சென்று விட்டார். பின்னர் அந்த வழியாக சென்றவர்கள் ஆனந்தை மீட்டு குழித்துறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
இது குறித்து தாயார் அஸ்வதி அருமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பள்ளி மாணவனை தாக்கிவிட்டு தப்பிய கண்டால் தெரியும் மர்ம வாலிபர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.