நிலக்கோட்டை, ஜூலை 3 –
நிலக்கோட்டை அருகே சிவஞானபுரம் அரசு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் ஒரு கோடி வரை மோசடி நடந்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடன் வாங்காத நபர்களுக்கு கடனை செலுத்த கோரி வங்கியில் இருந்து நோட்டீஸ் அனுப்பப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை அருகே சிவஞானபுரத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்தக் கூட்டுறவு வங்கியில் சிவஞானபுரம், கூட்டாத்து அய்யம்பாளையம், சி. புதூர், போடியகவுண்டன்பட்டி, குல்லிசெட்டிபட்டி மற்றும் கு. லட்சுமிபுரம் உள்ளிட்ட கிராம பொதுமக்கள், சிறு மற்றும் குறுந்தொழில் கடன், வணிக கடன், விவசாய கடன், நகை கடன், கால்நடை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 31.3.2015-ல் பத்து ஆண்டுகளுக்கு முன்பு சிவஞானபுரம் கிராமத்தைச் சேர்ந்த சுமார் 50-க்கும் மேற்பட்டவர்களின் 100 நாள் வேலைக்காக கொடுக்கப்பட்ட ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி ஒவ்வொரு நபர்களும் ரூபாய் 10 ஆயிரம் முதல் 20 ஆயிரம் வரை சிறு தொழில் கடன் பெற்றதாக கூறி தற்போது சம்பந்தப்பட்டவர்களுக்கு தாங்கள் வாங்கிய கடன், வட்டியும் அசலும் சேர்த்து ரூபாய் 27 ஆயிரத்தை உடனடியாக செலுத்த வேண்டும் என நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
நோட்டீஸ் பெறப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்கள் தாங்கள் வாங்காத கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு செலுத்த சொல்வதா? எனக்கூறி கூட்டுறவு வங்கிக்கு சென்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
அதேபோல் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சிவஞானபுரத்தைச் சேர்ந்த 25 நபர்கள் சுமார் 150 பவுன் வரை அடகு வைத்து நகை கடன் பெற்றுள்ளனர். இதில் நகை கடனை தமிழக அரசு தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், நகை கடன் பெற்றவர்களுக்கு நகையை வழங்காமல் உங்களுடைய நகைகள் ஏலம் போய்விட்டதாக கூறி கூட்டுறவு வங்கி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளது. ஆனால், சம்பந்தப்பட்ட நபர்களுக்கு நீங்கள் நகை கடன் பெற்ற நகைகளை ஏலம் விடப் போவதாக எந்த ஒரு நோட்டீஸும் அனுப்பப்படவில்லை என கூறப்படுகிறது.
இதுபோன்று சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடன் பெறாத நபர்கள் பெயரில் விவசாய கடன், சிறு குறு தொழில் கடன், கால்நடை கடன் உள்ளிட்ட பல்வேறு கடன்கள் பெற்றதாக மெகா மோசடியில் வங்கி நிர்வாகம் ஈடுபட்டு உள்ளது. அதேபோல், சுமார் 150 பவுன் அடகு வைத்த 25 நபர்களின் நகைகளை தமிழக அரசு தள்ளுபடி செய்த பிறகும் சம்பந்தப்பட்டவர்களிடம் வழங்காமல் வங்கி நிர்வாகம் மோசடியில் ஈடுபட்டுள்ளது.
தாங்கள் அடகு வைத்த நகைகளை திருப்ப முடியாமல் ஏலம் போய்விட்டதே என நினைத்து மன உளைச்சலாலும் குடும்ப பிரச்சினையாலும் இருந்த இக்கிராமத்தைச் சேர்ந்த கலைச்செல்வம், ராம்குமார், ராமு ஆகிய 3 நபர்கள் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.
சிவஞானபுரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூபாய் ஒரு கோடி வரை மோசடி நடைபெற்றுள்ளதாக புகார் எழுந்துள்ளது. இந்த வங்கி மோசடி குறித்து சம்பந்தப்பட்ட மாவட்ட கூட்டுறவு வங்கி நிர்வாகத்திற்கு இப்பகுதி பொதுமக்கள் புகார் அளித்துள்ளனர். இந்த வங்கியில் ஏற்பட்ட மோசடி சம்பவத்தால் இப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.