சென்னை, ஆகஸ்ட் 07 –
சென்னை அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை 6,000-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கான திறந்த இதய அறுவை சிகிச்சைகளையும் 10,000 குழந்தைகளுக்கான துளையிடும் இதய சிகிச்சைகளையும் வெற்றிகரமாகச் செய்துள்ளது.
2009-ம் ஆண்டு அப்போலோ குழந்தைகள் மருத்துவமனை நிறுவப்பட்டதிலிருந்து இதய அறிவியல் துறை பிறவி இதய நோய், பிற காரணங்களால் இதய நோய் ஏற்பட்ட குழந்தைகளுக்கு தொடர்ந்து உயர்தர சிகிச்சையை இந்த மருத்துவமனை வழங்கி வருகிறது. இதில் புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மேற்கொள்ளப்பட்ட இதய சிகிச்சைகள், குழந்தைகளில் மிகவும் சிக்கலான, அதிக ஆபத்துகளைக் கொண்ட இதய சிகிச்சைகள் ஆகியவையும் அடங்கும்.
மூத்த குழந்தைகள் இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் நெவில் சாலமன் இதுகுறித்து விவரித்தாவது: குழந்தைகளுக்கு இதய அறுவை சிகிச்சை செய்யும் போது துல்லியம், நேரம், பிறவி இதய குறைபாடுகள் பற்றிய ஆழமான புரிதல் ஆகியவை தேவை. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் எங்கள் அணுகுமுறை மிக தெளிவுடன் நோயறிதல், சான்றுகள் சார்ந்த நெறிமுறைகள், உடனடியாக முடிவெடுப்பது ஆகிய நடைமுறைகளை ஒருங்கே கொண்டதாக உள்ளது. இந்த அதிக ஆபத்துள்ள குழந்தை இதய நோயாளிகளுக்கு நல்ல சிகிச்சை அளித்து அவர்களை குணம் அடையச் செய்வதற்கு நுணுக்கமான தீவிர அறுவை சிகிச்சை திட்டமிடல், அறுவை சிகிச்சைக்குப் பின்பு தீவிர பராமரிப்பு உள்ளிட்ட பலதரப்பட்ட அம்சங்களை ஒருங்கிணைப்புடன் செய்ய வேண்டியது மிக முக்கியமானது என்றார்.
அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையின் இதயநோய் நிபுணருமான டாக்டர் சி.எஸ். முத்துக்குமரன் கூறுகையில், “குழந்தைகளுக்கான இதயவியல் சிகிச்சை நடைமுறைகள் கணிசமாக வளர்ச்சியடைந்துள்ளது. குறைந்தபட்ச ஊடுருவும் மருத்துவ தொழில் நுட்பங்கள் மூலம் பெருமளவிலான பிறவி இதய குறைபாடுகளுக்கு சிகிச்சையளிக்க முடிகிறது. இந்த நடைமுறைகள் முழுமையாகத் திறந்த இதய அறுவை சிகிச்சையின் தேவையைக் குறைப்பதுடன் குணம் அடையும் கால அவகாசத்தையும் குறைக்கின்றன. அப்போலோ குழந்தைகள் மருத்துவமனையில் மேம்பட்ட இமேஜிங், கேதடர் அடிப்படையிலான தொழில்நுட்பம் தனிப்பட்ட சிகிச்சை உத்திகளைப் பயன்படுத்துவது போன்றவை பாதுகாப்பாகவும் திறம்படவும் சிகிச்சை அளிக்க எங்களுக்கு உதவுகிறது” என்றார்.