தருமபுரி, ஜூன் 16 –
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் பாலக்கோடு பேரூராட்சியின் மூலம் எடுக்கப்படும் குப்பைகளை பொப்புடி செல்லும் வழியில் பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட குப்பை கழிவுகளை பிரித்து எடுக்கும் கூடம் உள்ளது. அங்கு முறையாக குப்பைகளை பிரித்து எடுக்காமல் மொத்த குப்பைகளையும் அருகில் உள்ள விவசாய நிலங்களில் கொட்டப்பட்டுள்ளதாக அங்கு உள்ள ஊர் பொதுமக்கள் பாலக்கோடு பேரூர் கழக செயலாளர் விக்னேஷ்யிடம் புகார் தெரிவித்தனர்.
அது சம்பந்தமாக தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் உடன் சென்று களத்தில் நேரடியாக பார்வையிட்டதில் சுமார் ஒரு ஆயிரம் லோடுக்கு மேலாக மருத்துவக் கழிவுகள் மற்றும் கண்ணாடி துண்டுகள் மற்றும் பிளாஸ்டிக் பேப்பர்கள் மற்றும் குப்பைகள் அனைத்தும் அப்படியே சுத்திகரிக்கப்படாமல் விவசாய நிலங்களில் கொட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. அருகில் இருக்கும் பொதுமக்கள் விவசாய நிலங்களில் குப்பைகள் பறந்து சென்று விழுவதால் விவசாயம் பாதிக்கப்படுவதாக மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் பாலக்கோடு பேரூராட்சியில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஊழியர்கள் உடனடியாக குப்பை கழிவுகளை அகற்றி தருமாறு ஊர் பொதுமக்கள் மற்றும் பாலக்கோடு பேரூராட்சி தமிழக வெற்றிக்கழக சார்பில் கோரிக்கை விடுத்தனர்.



