பரமக்குடி, ஜூலை 10 –
பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை எம்எல்ஏ முருகேசன் நேற்று தொடங்கி வைத்தார். தமிழக முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் என்ற திட்டத்தின் மூலம் 13 துறைகளில் உள்ள திட்டங்களை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக பகுதிகளில் திட்டத்தினை செயல்படுத்த வேண்டும். பொது மக்களின் தேவைகளை உடனடியாக நிறைவேற்ற இந்தத் திட்டத்தை தமிழக முதல்வர் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக, பரமக்குடி வடக்கு நகருக்கு உட்பட்ட மஞ்சள்பட்டினம், தர்மராஜபுரம் ஆகிய பகுதிகளில் 13 துறைகளில் 43 சேவைகளை பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ளும் விதமாக முருகேசன் எம்எல்ஏ வீடு வீடாகச் சென்று அரசின் திட்டங்கள் குறித்த விவரங்களையும், விண்ணப்ப படிவத்தையும் பொது மக்களுக்கு வழங்கி திட்ட முகாமை தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் பரமக்குடி நகர் மன்ற தலைவர் சேதுகருணாநிதி, வட்டாட்சியர் வரதன், வடக்கு நகர் செயலாளர் ஜீவரத்தினம், வடக்கு நகர் இளைஞர் அணி அமைப்பாளர் சேதுபதி, நகர்மன்ற உறுப்பினர்கள் தேவகிட்டு, அப்துல்மாலிக், நகராட்சி பொறியாளர் சுரேஷ் மற்றும் நகராட்சி அலுவலர்கள் தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.