நாகர்கோவில், ஜூலை 2 –
கலெக்டர் அழகு மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: குமரி மாவட்ட தோட்டக்கலை துறையின் கீழ் 2025 – 26ம் ஆண்டு பனை மேம்பாட்டு இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ. 2 லட்சத்து 15 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் 25 ஆயிரம் பனை விதைகளுக்கு ரூ. 75 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக 50, பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சிகள் மூலம் நடுவதற்கு 100 விதைகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
இதுபோல் 400 பனங்கன்றுகளுக்கு 40 ஆயிரம் ஒதுக்கப்பட்டுள்ளது. பயனாளி ஒருவருக்கு அதிகபட்சமாக 15, பொது இடங்களில் தொண்டு நிறுவனங்கள், ஊராட்சிகள் மூலம் நடுவதற்கு 30 பனங்கன்றுகளும் 100 சதவீத மானியத்தில் வழங்கப்படும்.
சுகாதாரமான மதிப்பு கூட்டப்பட்ட பனைப் பொருட்களை தயாரிக்கும் கூடம் அமைக்க பனை சார்ந்த சிறு தொழில் முனைவோருக்கு 160 சதுர அடியில் 2 நிரந்தர கட்டமைப்பு ஏற்படுத்திட 50 சதவீதம் மானியமாக ரூ. 1 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பயன்பெற விரும்பும் பயனாளி சொந்தம் அல்லது குத்தகை நிலத்தில் பனை சாகுபடி அல்லது பனை சார்ந்த தொழில் செய்பவராக இருக்க வேண்டும். பயனாளி தொடக்க பனை வெல்ல கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். மதிப்பு கூட்டப்பட்ட பனைப் பொருட்களை தயாரிக்கும் கூடம் ஒன்றிற்கு 50 சதவீத மின் இணைப்பு மானியமாக ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
தமிழ்நாடு பனைப்பொருள் வளர்ச்சி வாரியத்தின் கீழ் பனை மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பது குறித்த பயிற்சி பெறும் பயனாளிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இத்திட்டங்களை பற்றி மேலும் தகவல் அறிய அந்தந்த வட்டார தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களை அணுகி பயன் பெறலாம்.