நாகர்கோவில், ஜூலை 26 –
நாகர்கோவிலில் விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள நாஞ்சில் கூட்டரங்கில் நடந்தது. கலெக்டர் அழகுமீனா தலைமை வகித்தார். வேளாண் இணை ஆணையர் ஜென்கின் பிரபாகர், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் வசந்தி, ஆர்டிஓ காளீஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் பல்வேறு விவசாய சங்கங்களை சேர்ந்த விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.
கூட்டம் தொடங்கியதும் விவசாயிகள் பேசுகையில், அரசு அதிகாரிகள் வேளாண் துறையில் அக்கறை செலுத்த வேண்டும். கடந்த 2023-ம் ஆண்டில் பி.பி. சானலில் உடைப்பு ஏற்பட்டதால் கும்பப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. 2024-ம் ஆண்டில் தோவாளை சேனலில் உடைப்பு ஏற்பட்டதன் காரணமாக கன்னிப்பூ சாகுபடி பாதிக்கப்பட்டது. இந்த நிலையில் நடப்பாண்டில் அனந்தனார் சானலில் உள்ளிமலை கால்வாய் பகுதியில் உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக 110 நாட்கள் கொண்ட பயிர்களுக்கு உரிய தண்ணீர் செல்லவில்லை. இதனால் குமரியில் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் தண்ணீர் இன்றி பாதிக்கப்பட்டு விவசாயிகளுக்கு மகசூல் குறைந்தது. எனவே நஷ்டத்தை சந்தித்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
வேளாண் அதிகாரிகள் வருடம் தோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் கால்வாய்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வார்கள். ஆனால் கடந்த மூன்று ஆண்டுகளாக பயிர் சாகுபடிக்கு அணைகளில் தண்ணீர் திறக்கும் நேரத்தில் பராமரிப்பு பணிகள் நடப்பதால் கடைமடை பகுதி வரை தண்ணீர் செல்லவில்லை. இது அதிகாரிகள் தெரிந்தே செய்வது போன்று தோன்றுகிறது. மேலும் குமரி மாவட்டத்தில் கடந்த 1955ம் ஆண்டு 56 ஆயிரம் ஹெக்டேராக இருந்த விளை நிலங்கள் தற்போது வெறும் 6 ஆயிரம் ஹெக்டேராக குறைந்துள்ளது. இதற்கு விளை நிலங்களை வீட்டுமனைகளுக்கு அனுமதி அளித்தது காரணம் என விவசாயிகள் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள் வைத்து பேசினர்.
ஒரு கட்டத்தில் கோபமடைந்த 30க்கும் மேற்பட்ட விவசாயிகள் வேளாண் அதிகாரிகளை கண்டித்து கோஷமிட்டவாறு திடீரென கூடத்தில் இருந்து வெளியேறி வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் கலெக்டர் அலுவலக நுழைவாயில் பகுதியில் தேங்கி நின்ற தண்ணீரில் நாற்று நட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அங்கிருந்து சென்றனர்.