மார்த்தாண்டம், ஆக. 8 –
வாவுபலி பொருட்காட்சியில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பது தொடர்பாக எஸ் பி யிடம் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசைத்தம்பி தலைமையில் கவுன்சிலர்கள் நேரில் சென்று புகார் தெரிவித்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக எஸ் பி உறுதி அளித்தார். இதனால் வரும் 12 ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.
குழித்துறை நகராட்சி சார்பில் ஆண்டுதோறும் ஆடி அமாவாசையை முன்னிட்டு வாவுபலி பொருட்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. இவ்வாண்டு நடத்தப்பட்ட 100 வது வாவுபலி பொருட்காட்சி கடந்த 9 ம் தேதி ஆரம்பமாகி 28 ம் தேதி முடிய 20 நாட்கள் நடந்தது. பொருட்காட்சி திடலில் போலீஸ் பாதுகாப்பு அளிப்பதற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதற்கு நகராட்சி சார்பில் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து மீண்டும் போலீஸ் பாதுகாப்பு அளிக்கப்பட்டது.
அரசு விழாவில் கட்டணம் செலுத்தாமல் பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும் இந்தப் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கோரிக்கை விடுத்தும் நகராட்சி கவுன்சிலர்கள் வரும் 12 ம் தேதி போராட்டம் நடத்துவதாக அறிவித்தனர். நகராட்சி கவுன்சில் அவசர கூட்டம் கூட்டி தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில் குழித்துறை நகராட்சி சேர்மன் பொன் ஆசை தம்பி தலைமையில் 15 கவுன்சிலர்கள் நாகர்கோவில் எஸ் பி அலுவலகம் சென்று எஸ் பி ஸ்டாலினை நேரில் சந்தித்து புகார் மனு தெரிவித்தனர். குழித்துறை வாவுபலி பொருட்காட்சி குழித்துறை நகராட்சி சார்பில் நடத்தப்பட்டு வருகிறது. இது முழுக்க முழுக்க அரசு விழாவாகும். நுழைவுக் கட்டணம் நகராட்சி சார்பில் வசூல் செய்யப்படுகிறது. உள்பகுதி உள்ள பக்க காட்சி மட்டுமே கான்ட்ராக்ட் விடப்படுகிறது. அரசு விழா என்பதால் போலீஸ் பாதுகாப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாது என மனுவில் தெரிவிக்கப்பட்டது.
மனுவைப் பெற்றுக் கொண்ட எஸ் பி ஸ்டாலின் அரசு விழாவிற்கு கட்டணம் செலுத்த தேவையில்லை என தெரிவித்தார். வாவுபலி பொருட்காட்சி தொடர்பாக பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக உறுதி அளித்தார். இதனைத் தொடர்ந்து வரும் 12ம் தேதி நடைபெறுவதாக இருந்த போராட்டம் கைவிடப்பட்டது.