தருமபுரி, ஆக. 4 –
தருமபுரி மாவட்டம் தருமபுரி வட்டம் ப. குளியனூர் பகுதியில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ திரௌபதி அம்மன் ஆலய 36-ம் ஆண்டு ஆடி 18 திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இவ்விழாவில் ஆடி 17-ம் நாளில் இரவு திரௌபதி அம்மனின் கூந்தல் முடிப்பு நாடகம் நடைபெற்றது. பதினெட்டாம் நாள் அம்மனுக்கு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.
இவ்விழாவில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் அம்மனை தரிசனம் செய்தனர். மேலும் ஒவ்வொரு வருடமும் பக்தர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையில் குழந்தை வரம் பெற்ற தாய்மார்கள் தங்கள் குழந்தையின் எடைக்கு எடை நாணயங்கள் செலுத்தியும், பூ கரகம் தீச்சட்டி எடுத்துக்கொண்டு தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
திரெளபதி அம்மன் ஆடி பதினெட்டு திருநாளில் கோயில் பூசாரி முருகன் தலைமையில் பூஜைகள் நடைபெற்றது. மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் கிருஷ்ணமூர்த்தி, சங்கர், அப்பாமணி, விஸ்வநாதன், கோடீஸ்வரன், ஆயர்பாடி, ராஜேந்திரன், அன்சர் பாஷா விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா குழுவினர் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது.